வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஐந்து கரத்தனை

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!

 கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; - தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்....நாலடியார்

தன் கண்களால் காண்பதை மட்டுமே காண்பவர்கள் குழந்தைகள். அதைத்தாண்டி பார்க்கும் நிலையே வளர்ச்சி.அது கல்வியால் கைவரும்.அதுவே படைப்பாற்றல்,கற்பனை.ஆராயும்போது அதுவே உலகை ஆள்கிறது.
அதைத்தாண்டி பார்க்கும் யுக்தி கைவரப்படாதவர்கள் கல்வி கற்றும் ஒரு பெரிய குழந்தைகளே.

 புத்தகங்களை வாசிக்கிறேன் என்று சொன்னால் கல் தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய மூத்த குடியைப் பார்பதுபோல் என்னைப் பார்க்கிறார்கள் சிலர்.
புத்தகங்களை வாசிக்காமல் இருப்பது அவரவர் விருப்பம்.ஆனால் நான் புத்தகம் வாசிப்பதைப் பார்த்தாலே சிலர் கோபம் கொள்வதை,நான்ஏதோ தகாத காரியம் செய்வதைப் போல் உணருவதைப் புரிந்துகொள்ள முடிய வில்லை.காலில் படும் காகிதமும் கலைமகளே எனத் தொட்டுக்கும்பிடும் எனக்கு இதெல்லாம் புதிசா இருக்கு?
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் ;
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் ;
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துள் பொருள் ஆவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக