செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

மாயப்பெருநதி-ஹ.பி.

 

லிபரலிசத்தின் பாதிப்பால் மரபை நீக்கிய மூன்றாவது தலைமுறை நாற்பதுகளில் இருப்பவர்கள்.அது எந்த அளவுக்கு சென்றது எனில் திருமண்,திருகாப்பு அல்லது திலகம் அணிவதையே பொதுவெளிகளில் தவிர்ப்பது என்றானது.இத்தகைய நிலையில்தான் நம் மரபை நோக்கித் திரும்பும் நாவல்களை வாசிப்பது விருப்பமானது.ஹரன் பிரசன்னாவின் மாயப்பெருநதி அத்தகைய படைப்பு.முன்பதிவு செய்து சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது.அட்டைப்படம் பார்த்தவுடனே ஈர்த்தது.


முதல் பகுதியான ராகவன் கதை வாசிப்பின்பத்தை அளித்து,பகடியும் நகைச்சுவையும் இழையோடி பக்கங்கள் பறக்கின்றன.அதற்கு காரணம் ஆசிரியர் சார்ந்த துறை என்பதால் அவரின் நேரடி பதிப்பக அனுபவம் அதில் பதிவாகி உள்ளது என்பதே.மேலும் சி.சு.செல்லப்பாவை நினைவுறுத்தும் நாயகனின் போக்கு அதனை மெருகேற்றுகிறது.(புத்தகங்களை சுமந்து சென்று விற்பது)செல்லப்பாவுக்கு ஹபியின் ட்ரீபியூட் என்று தோன்றுகிறது.

 “விடிந்தால் உத்தியோகம். தேதி ஆனால் சம்பளம். வேளைக்குச் சாப்பாடு. விழுந்து புரள பெண்டாட்டி. அவ்வப்போது சந்தோஷம். அளந்து அளந்து பூரிப்பு. கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடலாம்”.

       இது பா.ராகவனின்     அலகிலா விளையாட்டு நாவலில் உள்ள வரிகள்.இப்படி இன்ட்ரோவர்ட்ஆன மிடில் கிளாஸ் மனிதன் தன் பிழைப்பை மட்டுமே வாழ்வியலாக கொள்கிறான்.அதில் தவிர்க்க இயலாத முறையில் அலுவலக சூழலில் சந்திக்கும் மனிதர்கள்,உறவினர்களிடம் மட்டுமே பழகி நட்பு கொள்கிறான்.இப்படிக் கழிகிறது அவன் வாழ்வு.மற்றபடி அவனுக்கு மரபு,தத்துவம் பற்றிய புரிந்துணர்வு கொள்ள நேரமில்லை,அவசியமும் வரவில்லை.

பதிப்பக அரசியல்,சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை ஊழியராக சந்திக்கும் சங்கடங்கள்.படைப்பாளிகளின் வாய்ஜாலங்கள் இவையெல்லாம் விரிவாக வருகிறது.

ஆனால் நடுவயதில் கனவில் வரும் தாமிரபரணி நதி மூலம்,ரீ இன்கார்நெஷன் அவனுள் தோற்றம் கொள்கிறது.அவனை  அகக்கொந்தளிப்புகள் கொண்டவனாக ஆகுகிறது.அந்த ஸ்வப்னத்தின் மூலம் அவன் தன் முற்பிறவி வாழ்க்கையை கண்டுகொள்கிறான்.அதிலிருந்து மாத்வ தரிசனத்தை நோக்கிப் போகிற பாதை திறக்கின்றது.

மரபை அறியாமல் நடுத்தர வாழ்க்கை வாழும் ஒருவனை கர்ம வாசனை எழுதத் தூண்டுகிறது.அதன் காரணம் முற்பிறப்பில் அவன் எழுதி நதியில் இட்ட கதை.அப்போது அவன் மாத்வ மரபின் சீடன்.

இந்திய தரிசனம் அனைத்திலும் சடங்குகள்,மறுபிறவி,கர்மா,குருபக்தி,முக்தி இவற்றை விளக்குபவை அல்லவா.குருவின் கருணை தேடல் கொண்ட மனிதனுக்கு மிக முக்கியம்.வைணவத்தில் கூட.

இந்த நாவலின் இரண்டாவது கதையின் முக்கியத்துவம் அது மாத்வ மரபை அறிமுகம் செய்கிறது என்பதே.மாத்வ குருவான மத்துவரின் மற்றொரு பெயர் ஆனந்ததீர்த்தர்.மாதவன் மற்றும் ஆனந்தன் என்ற இரு பெயர்களுமே மாத்வ குருவின் பெயரை எதிரொலிப்பதே அவர்களின் பாத்திரப்படைப்பை சொல்லிவிடுகிறது.

இதில் குருவும்,மாமனாருமானவரின் சாபம் கர்மாவாக ஆனந்தன் மேல் விழுந்து பிறவிகளாத்தொடர்கிறது.

த்வைதத்தின் முக்கியத்துவம்,அதன் சடங்குகள்,நூல்கள் இவற்றை ஹபி விரிவாகவே பதிவு செய்கிறார்.

இந்நாவலை இப்படி புரிந்து கொள்கிறேன். கனவில் எழும் கதையை எழுதுவதன் மூலம் தான் பிறந்த மாத்வ மரபை ராகவன் உணர முயல்கிறான்.அன்றாட வாழ்வின் பிழைப்பின் சலிப்பை அவனின் மென்மையான குணம் கொண்ட,அபூர்வமான வாழ்க்கைத்துணைவி மூலம் கடந்து வந்து மரபின் பாதையில் நடை போட ஆரம்பிக்கிறான்.அதற்குச் சாதகமாக அவன் நதியில் கிடாசிய  தசமுக அனுமனின் பிரசன்னம் துணையாக வருகிறது.கடந்த பிறவியில் அவன் பொறாமையால் வெறுத்த அவன் நண்பன் மற்றும் குருவாக மாறிய சுஜலேந்திரர் ஆசிதானே அது.

வெவ்வேறு காலகட்ட கதைகளை இரு வண்ண இழைகளாக எடுத்துப்  பின்னி,ஐம்பெரும்பூதங்களான நீர்,நிலம்,காற்று,தீ மற்றும் ஆகாயம் இவற்றின் பின்னணி கொண்டு அனுமன் என்னும் படிமம் வாயிலாக இணைத்திருக்கிறார்.

மாத்வத்தில் அனுமன்(வாயு அம்சம்) ஒரு முக்கிய படிமம்.வாயு அம்சமே மத்துவர்.எனவே எந்த விக்ரஹத்தால் குருவின் சாபம் விழுந்ததோ,அதுவே மறுபிறவியில் மனைவி வழியாக அவனைத் தேடி வருகிறது.அவன் சம்சார சாகரம் கடக்க குருவின் கருணை பரிபூரணமாக உள்ளது என்பதையே அது குறிப்பிடுகிறது.இதில் வரும் மாயப்பெருநதி அவனின் மரபான மாத்துவ தரிசனத்தையே குறிக்கிறது.

இந்நாவலை வாசிக்கும்போது பா.ராகவனின் அலகிலா விளையாட்டு மற்றும் தி.ஜாவின் அம்மா வந்தாள் நினைவுக்கு வருகிறது.அதிலும் இதே வேதப்பள்ளி,ஆன்மீக பின்னணி.ஆனால் ஹரன் இதில் தான் சார்ந்த மாத்வ சம்பிரதாயத்தை,மாத்வ தீஷை கொண்ட அனீஷ் கிருஷ்ணன் நாயர் தந்த தகவல்கள் உதவியுடன் எழுதி இருக்கிறார்.

பா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலைப் போல எளிய நடை மற்றும் பிராமண வாழ்வியலைப் பதிவு செய்கிறது.அதில் கங்கை எனில் இதில் தாமிரபரணி.பா.ரா.வின் எழுத்துக்களில் இருந்து ஹபியை வேறுபடுத்தி காட்டுவது அவரின் பாலியல் சித்தரிப்புகள்.

சமீபத்தில் இவ்வாறு காமத்தை அதன் உக்கிரத்துடனேயே சித்தரித்து இருப்பது,தேவிபாரதி என்று நினைக்கிறேன்.(நிழலின் தனிமை)

நான்கு சுவர்களுக்குள் யாருமறியாமல் மனமொத்த தம்பதியர் நிகழ்த்தும் காமத்துய்ப்பின்போது வெளிப்படுத்தும் உணர்வுகளும்,நிகழ்வுகளும் மிக அழகாக காட்சிப்படுத்தப்படிருக்கிறது.சில வாக்கியங்கள் தெறிப்புகளாக மேலே வந்து விழுந்து சுடுகிறது.

ஆனால் இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும்.லஷ்மி போல நேர்மறைத்தன்மை கொண்ட பெண் இருப்பாள் என நம்ப இயலவில்லை.சரி புனைவுதானே.போகட்டும்

ராகவனின் கதை கொண்டாட்டம் எனில் ஆனந்தனின் கதை பொறாமை கலந்த அவலம்.அதனால் இரண்டாவது கதையில் புலம்பல் தொனி அதிகமாகப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.மாத்வ சம்பிரதாயத்தை உள்வாங்க முடியாமல் ஆனந்தனின் தன்னிரக்கமும்,புலம்பலும் முன்னுக்கு வந்துவிட்டன.வாசிப்பு வேகத்தை சற்று குறைக்கிறது.

மாத்வதத்துவத்தின் சடங்குகள் டீடெய்லாக இருப்பதுபோல மாதவன், சுஜலேந்திரராகத் துலங்கி வருவது இன்னும் சில சம்பவங்களின் மூலம் அழுத்தமாக நிறுவிஇருக்கலாம்.மேலும் துவைத தத்துவம்(ஹரி சர்வோத்தமா,வாயு ஜீவோத்தமா) சிறிதளவே தொட்டு காட்டி உள்ளார் எனலாம்.

அதேபோல் மாத்வ பிராமணர்களான ராகவன்-லஷ்மி இல்லத்தில் கன்னடத்தில் உரையாடுகிறார்கள்.எனவே அவர்களின் கன்னட உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ.சாண்டில்யன் ராஜபேரிகை புதினத்தில் இந்த டெக்னிக் உபயோகப்படுத்தி உள்ளார்.(ஆங்கில உச்சரிப்பை,தமிழில் பதிவு செய்து,அடைப்புக்குள் தமிழ் மொழிபெயர்ப்பு கொடுத்திருப்பார்)

இதற்கு ஒரு காரணம் உண்டு.ஹபி தன் புதல்வி ஒரு நீதிக்கதை கூறும் காணொளியை முகநூலில் பதிவேற்றி இருந்தார்.அதில் இயல்பாக அக்குழந்தை கன்னடத்தில் பேசிக்கொண்டு இருப்பாள்.அதில் இயல்பான ஒரு பியுட்டி இருக்கிறது.சட்டென்று பிரக்ஞை கொண்டு அய்யயோ தமிழில் பேசாமல்,கன்னடத்தில் கதைத்து விட்டேனே என்று வெட்கப்பட்டு ஓடிவிடுவாள்.

இவையெல்லாம் குறையாக அல்ல ஒரு விடுபடலாக உள்ளதை சுட்டுவதாகக் கொள்ளலாம்.

மனிதர்கள் வாழ்வு எல்லைக்கு உட்பட்டது.ஆனால் மரபு காலந்தோறும் ஓடிகொண்டே இருக்கும் ஜீவநதி.தேடல் கொண்டவருக்காகவும் இக்கதையின் நாயகனுக்காகவும் அது காத்திருக்கிறது. இறுதி வரி தாமிரபரணி அவனுக்காக காத்திருக்கிறது என்பது அதைதான் குறிக்கிறது என நெகிழ்ச்சியாக முடிகிறது.முதல் நாவல் என்ற வகையில் ஹபிக்கு வாழ்த்துக்கள்.