ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வருத்தப்படாத கரடி சங்கம்

வீட்ல, கையில டிவி ரிமோட் சிக்கினால் ரிமோட் அழற அளவுக்கு எல்லா சேனலையும் மாத்தி கதற அடிப்பேன்.
ஆனா அம்மா இந்த விஷயத்தில் ரொம்ப நல்லவங்க. ஒருமணி நேர சீரியலா இருந்தாலும் விளம்பர இடைவேளையில் கூட வேற சேனல் மாத்த மாட்டாங்க.எப்பவும் சன்தான்.
இப்ப என்னோட பையணும் அப்படித்தான்.சுட்டி டிவி வச்சிட்டா நாலு மணி நேரத்துக்கு ரிமோட் தேவைப்படாது.அதனால அடியேனும் சுட்டி டிவிக்கு ரசிகன் ஆயிட்டேன். அதுல பசுமை வாய்ந்த மரங்களும்,காட்டுயிர்கள் உலவும் வனம் சார்ந்த ஒரு தொடர் வாரம் ஐந்து நாள் வருகிறது
 அதன் பெயர் வருத்தப்படாத கரடி சங்கம்’.சீனத்தயாரிப்பான அக்கதையில் வைகைப்புயல் வடிவேலின் குரலில் பேசும் ஒரு வேட்டைக்காரன் காட்டில் உள்ள மரங்களை வெட்டி வியாபாரம் செய்து வருகிறான்.அதனால் தாங்கள் மகிழ்ச்சியாக வாழும் காடு மெல்ல அழிந்துவிடும் என்று அங்கு வசிக்கும் சகோதரர்களான கரடிகள் இரண்டும்,அணில் ஒன்றும் அச்சப்படுகின்றன. இதனால் வேட்டைக்காரனை மரம் வெட்டவிடாமல் தடுத்து நிறுத்த தொடர்ச்சியாக அவை முயற்சி செய்கின்றன.. குழந்தைகளுக்கானது என்பதால் வேடிக்கையும் நகைச்சுவையும் இக்கதையில் போட்டி இடுகின்றன.கதையின் மையம் காடு அழிவுறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் அருமையாக உள்ளது.
ஒளிபரப்பாகும் நேரம்
MON - FRI:10:00AM;5;00PM 10:30PM...

வைத்தியசாலை அனுபவங்கள்....

சென்ற சில மாதங்களாகவே இடதுகை,தோளில் குடைச்சல் இருந்தது.இடது கை வலி என்றாலே மாரடைப்பின் அறிகுறி என்று ஒரு சம்சயம்.உலகத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் ஏதும் இல்லை என்றாலும் இவ்வயதிலேயே இறைவன் திருவடி நிழலை அடைய அவசரம் ஒன்றுமில்லை அல்லவா...
ஸோ,அரியூரில் எழுந்துள்ள விஜயகாந்த் ஆஸ்பத்திரி என்று அன்போடு அழைக்கப்படும் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துகொள்ள ஆங்குள மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டேன்.
 சிகிச்சை தரும் பெண் பிசியோதெரபி இறுதிவருட மாணவி.பெயரென்ன,எந்த ஊர் என்று இயல்பாகப்பேசியபடியே கையைத்தூக்கி,மடக்கி எங்கெங்கு வலி என்று அனலைஸ் செய்தார்.பின்னர்
பச்சைத்திரை முழுதும் வாயிலை மறைக்கும்
ஒரு சிறிய அறைக்கு அழைத்துச்சென்று அமரவைத்தார்.உள்ளே சில அப்பாரட்டஸ்.(காண்க படம்)மேலுடையை நீக்கி அந்த கருவியில் உள்ள நான்கு வயர்களை இடது கையின் வலி உள்ள புள்ளிகளில் இணைத்து இயந்திரத்தை முடுக்கிவிட்டார்.சட்டென்று கைக்குள் ஒரு பிரளயம்,அதிர்வுகள்,நரம்பு முறுக்கல்கள்...பிசைதல்கள்....அந்த அதிர்வுகளை கூட்டவும்,குறைக்கவும் முடியும்.இந்த ட்ரீட்மென்ட் பெயர் அல்ட்ராசவுண்ட் டெக்நிக் என்று அப்பெண் சொன்னார்.ஒலி அலைகள் தசைகளில் புகுந்து செய்யும் மாயம்.
இதுவரை உணர்ந்திராத அனுபவம்,பன்னிரண்டு நிமிடம் நீடித்த ட்ரீட்மென்ட்.
இப்போது வலி குறைந்துள்ளது போல் பட்டது.ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும்,வீட்டில் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கவேண்டும் என்று அறிவுறித்த நன்றி சொல்லி விடைபெற்றேன்.அதைத்தான் செய்து வருகிறேன்.
மருத்துவ அதிசயங்களில் ஒன்றாக எனக்கு அது தெரிந்தது. மனித அறிவின் வளர்ச்சியை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்புதானே அது. இப்படிப்பட்ட அனுபவங்களின் திரட்சிதானே வாழ்க்கை.

பகவான்

15 ஆண்டுகளுக்கு முன் பகவான் ரஜ்னீஷின் நூல்களை ரோமன்த் ரோலந்த் நூலகத்தில் நாள் முழுதும் அமர்ந்துகொண்டு வாசித்து அகமாறுதல் கொண்டு இரவு எட்டுமணிக்கு வெளிவரும்போது அடைந்த உணர்வெழுச்சி....
 ஜெ.மோ. சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.....
"இருபத்தைந்து வருடம் முன்பு நான் ஒருநாள் ஒரு நூலகத்தில் இருந்து வெளியே வந்து தெருவில் செல்லும் பெரும் கூட்டத்தைப் பார்த்து சட்டென்று மன அதிர்ச்சி அடைந்தேன். அவரில் எவருக்குமே மானுடம் இத்தனை காலம் சேர்த்து வைத்துள்ள ஞானத்தின் துளிகூட தெரியாது. அவர்கள் எவரும் எதையும் சிந்திப்பவர்கள் அல்ல. இளமையில் அவர்களுக்கு பிறப்பில் தற்செயலாக எது கிடைக்கிறதோ எதை சூழல் அவர்கள் மேல் ஏற்றுகிறதோ அவைதான் அவர்கள். அவர்கள் அடைவதென்று ஏதுமில்லை. பிரம்மாண்டமான ஒரு பரிதாபம் என் தொண்டையை அடைத்தது. உண்மையில் அன்று நான் கண்ணீர் மல்கினேன்."-ஜெ.மோ.

சனி, 6 ஏப்ரல், 2019

வன்மேற்கின் தேவதை


 ராதாகிருஷ்ண வடிவம் காதலின் சிம்பல்.ஒரு விஷயம் தெரியுமா...கிருஷ்ணன் ராதாவை விட பத்துவருடம் இளையவன்.காவியக்காதல் என்பது வயதில் அதிகமான பெண்ணோடு வருவது என்பது அனுபவ உண்மை.
1995ஆம் வருடம் குமுதத்தில் அன்டோனியோ பெண்டேராஸ் சண்டைக்காட்சிகளில் மட்டுமின்றி காதல் காட்சிகளில்கூட அதகளம் செய்திருக்கிறார் என்று வாசித்தேன்.அந்த
ப்படத்தைக்காண ஆவல் எழுந்தது.
 நான் என்றைக்காவது லம்போர்கினி வாங்கினால் அந்தப்படத்தின் பெயரை வைப்பேன்.டெஸ்பெரோடோ.ஆம் டெஸ்பெரோடோ என்றால் அஞ்சாதவன் என்று பொருள்.கிட்டார் என்ற இசைக்கருவியை இளைஞர் மத்தியில் ஒரு வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக உலவவிட்டது சிறப்பு.என்ன ஒரு ஸ்டைலிஷ் மேக்கிங்.அருமையான ஆக்க்ஷன் மூவி.விஷயம் அதுவல்ல.என்னைவிட பன்னிரண்டு வயது மூத்த அழகுப்புயல் தாக்கியதும் அப்பொதுதான்.வாழ்வின் இனிய தருணமது.
 டெஸ்பெரேடோவில் வரும் நாயகி சல்மா திரைப்படங்களில் மட்டுமே காணப்படும் குறும்புப்பெண்தான்.கவர்ச்சி,விரைந்து காதலில் வீழ்தல்(ஈசியா மடிஞ்சிரும்)வீட்டின் கூரைகளில் தாவிப்போய்,நாயகனுக்கு இணையாய் துப்பாக்கிகளால் சுடுவது இப்படி...ஆனால் கரோலினா என்ற பெயரில் வரும் நாயகி முதலில் புத்தகக்கடை வைத்து நடத்துபவர் என்றே அறிமுகம் ஆகிறார்.அப்போதே மனதில் இடம் பிடிக்கிறார்.(நாயகன் மனதில் மட்டுமல்ல)
ஹாட் ச்சிக் என்ற சொல் சிறப்பாக பொருந்துவது டெஸ்பரேடோ நாயகிக்கே.அதாவது 1995இல் மட்டுமல்ல.இந்த வருடம் வெளிவந்த தி ஹிட்மென்ஸ் பாடிகார்ட் படத்தில் அவரைக்காணும்போதும்(இப்போது வயது 53) இப்போது கூட அப்பிடித்தான் தோன்றுகிறது.
சரி,சரி பெயரைச்சொல்லி விடுகிறேன்.சல்மா ஹயக்.மெக்ஸிகோவில் பிறந்தவர்.பழுப்பு நிற காந்தவிழிகள் உடையவர்.36-24-36.கூந்தல் கருப்பு.ஒரே திருமணம்தான்.ஒரு பெண் குழந்தை உள்ளது.கிறித்தவராக இருந்தாலும் யோகா செய்வதில் அதிக விருப்பம். தி ஹிட்மென்ஸ் பாடிகார்ட் படத்தில் அவரின் என்ட்ரி யோகாசனம் போஸில்,அதுவும் ஜெயிலில் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.புகைப்படம்

கண்டு இதயத்தாக்குதல் அடையுங்கள்.
 இயல்,இசை,நாடகம் தமிழர்களின் புதையல்கள்.நாடகத்தின் உச்சம் திரைப்படம்.இதனால் நாட்டைப்பிடித்தவர்கள் உண்டு.நாசமாய்ப் போனவர்களும் உண்டு.அதே நாடகத்தின் உறைந்த வடிவம் சித்திரம்.அந்த சித்திரம் ஓவியங்களாக மிளிரும்.மட்டுமல்ல சித்திரக்கதைகள் என்னும் கலையாகவும் பரிணாமம் அடைந்துள்ளது தற்போது.அவை காமிக்ஸ் என அழைக்கப்படுகிறது.
கவ்பாய் கதைகள் காமிக்ஸ்சின் ஈர்ப்பு கொண்ட வடிவம்.அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களும்,புகை கக்கும் ரயில் வண்டிகளும், ,புழுதி பறக்கும்படி விரையும் புரவிகளும்,பாலைவனமும்,தங்க வேட்டையும்,தொப்பி போட்ட ரேஞ்சர்களும்,சலூனும்,வின்செஸ்டர்&ரிவால்வர் சண்டைகளும் என அது ஒரு தனி உலகம்.
அதில் ஒரு காவியம் மைக்கேல்சார்லியரால் உருவாக்கப்பட்டு,சித்திர வித்தகர் மோபியஸ் ஜிரவ்வால் உயிர் கொடுக்கப்பட்ட மின்னும் மரணம்(கான்ஃபெடேரேட் கோல்ட் சீரிஸ்) என்னும் பதினொரு பாகக் கதை.அமெரிக்காவின் தென்பகுதியில் 1861-1865ஆம் வருட வாக்கில் நடைபெறுவதாக புனையப்பட்டிருக்கும்.உண்மையில் அந்தக்காலகட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுப்போர் நடைபெற்று விளைவாக பல லட்சம் பேர் உயிர்இழந்தார்கள்.கறுப்பர் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அற்புதமான இக்கதையை தமிழிலும் வாசிக்கலாம்.விலை ஆயிரம் ரூபாய்தான்.

 அதில் சிகுவாகுவா சில்க் என்ற காலத்தால் அழியாத வனப்பும்,சாகசமும்,சாதுர்யமும் கொண்ட நங்கையின் பாத்திரத்துக்கு சல்மாதான் பொருத்தம்.அவரைத் தவிர வேறு எவரையும் கற்பனை செய்ய முடியவில்லை.இருவரும் மெக்ஸிகோ என்னும் சிப்பியில் பளிச்சிடும் முத்துக்களே..மட்டுமல்ல சல்மாவின் அங்கலாவண்யங்கள் கூட முழுமையாகப்பொருந்துகின்றன.

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

குயில் பாட்டு

குயிலின் குரலைப் பற்றி எத்தனை எத்தனை திரைப்பாடல்கள்,சொல்லாட்சிகள்,பழமொழிகள்.....உடனே நினைவுக்கு வரும்.ஆனால் குயிலைக் கண்டதுண்டா? சமீப காலம் வரை செம்போத்துதான் குயில் என்று நினைத்திருந்தேன்..
ஆனால் குயில்களில் ஆண்,பெண் வேறுபாடு உண்டு.பெண்குயில் வெண்மை நிறத்தில் புள்ளிகளுடன் காணப்படும்.கூவாது.குழறும்.மிக எளிதாக அதனைக்காணலாம்.கண்டிருக்கிறேன்.
 நாம் கேட்பதெல்லாம் ஆணின் ஏக்கமும்,சோகமும் கொண்ட கீதத்தையே... அது ரொம்ப கூச்சம் கொண்ட பறவை.புதருக்குள்ளேதான் இருக்கும். வெயில் பிடிக்காது.அதுக்கு உணவும் இலைகளுக்குள்ளேயே(கொட்டைகள் பழங்கள்)கிடைப்பதால் காண்பது கடினம்.
மழைக்காலத்திலேயும் குயில் கூவும் ”கோடைகாலத்திலே குயில் அதிகமாக்கூவும்.இப்பதான் குயிலுக்கு இனப்பெருக்க காலம்… மார்ச் முதல் ஆகஸ்ட் வரை… Eudynamys scolopacea!?(எப்பிடி படிக்கிறது) என்ற பறவையியல்பெயர் கோண்ட குயில் Asian Koel என்று அழைக்கப்படுகிறது.

 இத்தகையதொரு பறவையைக்காண நான் அலையாத இடமில்லை,ஆனால் காண முடியவில்லை.
கடந்த எட்டாம் தேதி காலை எட்டு மணி.பாண்டி கம்பன் கலையரங்கம் உள்ளே சென்றபோது குயிலின் கானம் செவியில் இனிக்க,மேலே அண்ணாந்த போது அங்குள்ள இலவமரத்தில் ஆண்குயில் இருந்து…கூவிக்கொண்டிருந்தது தெளிவில்லாமல்...எனக்குப்பதற்றம்....பறந்துவிடாது இருக்க வேண்டுமே..மங்கலாக.....நன்றாகப் பார்க்கவேண்டும்...பிபி எகிற...உற்ற நண்பன் நிக்கானை எடுத்து ஜூம் செய்ய... கொஞ்சநேரம் ஒன்றும் தெரியவில்லை...பிறகு வியு பைன்டரில் மெல்ல துலங்கி வந்தது. கருப்பு வண்ண முதுகு.ரத்தச்சிவப்புக் கண்கள். மஞ்சள் அலகு. ஆசம்...பரவசம்.பாடும்போது குயிலை நான் பார்ப்பது முப்பத்தி எட்டு வயதில் இதுவே முதல்முறை.வாழ்க்கையின் சிறந்த தரிசனம்.ஆனால் அந்தக்குயில் என்னைப் பார்த்ததா?Who knows….

காட்டுப்பாக்கம் தாத்தா

ஒன்னாப்பு படிக்கற வயசுல மனசுல பதிஞ்ச பாட்டு,புடிச்சவங்க விரும்புங்க.இந்தக்குழந்தைப்பாடலை இயற்றியவர் “தம்பி ஸ்ரீநிவாசன்”
என்று இன்றுதான் அறிந்தேன்.நன்றிகள் கோடி.
காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்,
மாடி மேலே நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்,

ஆந்தை இரண்டு, கோழி மைனா,
அண்டங்காக்கை, குருவிகள்
பாந்தமாக தாடியுள்ளே பதுங்கிக் கொண்டிருந்தன.
உச்சி மேலே நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு! அச்சு! என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.
நன்றி-தம்பி சீனிவாசன்

PERFUME

ஜேம்ஸ்பாண்ட் படங்களில்,அவருக்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட கார்களை உருவாக்கி அளிப்பவராக சித்தரிக்கப்படும் டாக்டர் Q முதியவராக இருப்பார்.ஆனால் கடைசி இரு படங்களில்(SKYFALL,SPECTRE) ஓர் இளைஞர் அவ்வேடத்தை ஏற்று அசத்தலான நடிப்பை வழங்கி இருந்தார்.நினைவுக்கு வருகிறதா.....அவர் பெயர் பென் விஷா.
அவ்விளைஞர் 2006இல் நடித்துவெளிவந்த ஜெர்மன்படத்தைக்காண நேரிட்டது.படத்தின் பெயர் PERFUME.ஆமாம்.சென்ட்டின் கதைதான்.பதினேழாம் நூற்றாண்டில் நடப்பதாக ஆரம்பிக்கிறது.இப்படி எல்லாம் கூட திரைப்படங்களை உருவாக்க முடியுமா என்று திகைத்துப்போய்விட்டேன்.என்ன ஒரு script.கடைசியில் பார்த்தால் அந்த திரைக்கதையை அமைத்தவர் RUN LOLA RUN கொடுத்தவர்தான்.
( TOM TYKWER)இயக்குனரும் அவரே.கம்போசரும் தான்.

இப்படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு edge உள்ளது.அதிலிருந்து கற்பனை செய்து தத்துவம்,ஆன்மிகம் போன்ற உயர்தளங்களுக்குச் செல்லலாம்.
இப்படி பயமுறுத்தறேன்னு படத்தப்பாக்காம விட்ராதீங்க.அருமையான த்ரில்லர்.ஆனால் ஒன்று படம் வயது வயதுவந்தோருக்கானது.தனிமையில் அல்லது ரசனையுடைய ஒருவருடன் அமர்ந்துதான் பார்க்க வேண்டும்.திருமணமாகி முப்பது வயதுக்கு மேற்பட்டிருந்தால் நலம்.அப்போதுதான் சாரத்தை உணரமுடியும்.நண்பர்களுடன் கூட்டமாகப் பார்த்தால் வம்புதான் மிஞ்சும்.
வலுவான நண்பர்கள்,தரமான விடுதியில் ரெமி மார்ட்டின் வாங்கித்தந்தால்
நாள் முழுதும் இக்காவியத்தினைப்பற்றி உரையாடலாம் என்றிருக்கிறேன்.மெர்சி.

சிறகு முளைத்த வீடு

கார்லும், ரஸ்ஸலும் சந்திக்கும் பாத்திரங்களும், அனுபவங்களும் அவர்களை மட்டுமல்ல நம்மையும் ஒர் வினோதமான சாகசப் பயணத்திற்கு அழைத்து செல்கிறது. மனிதர்களை நடித்துக் காட்டும் ஒர் அரிய இனப் பறவை, இப் பறவையை பிடிக்க வலை விரிக்கும் பேசும் நாய்களின் கூட்டம், கொடிய எண்ணம்கொண்ட பேசும் நாய்களின் எஜமான் தாத்தா என அற்புதமான கற்பனை வளம் கொண்ட கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள இக்கதையின் மாந்தர்கள் மனதை மயக்குகிறது.
UP எனும் இத்திரைப்படத்தை நம் வீட்டுக் குழந்தைகளுடன் தாரளமாகக் காணலாம்.
கதையில் உங்கள் மனதை கலங்கவும்,நெகிழவும் வைக்கும்,சிரிக்கவும்வைக்கும் தருணங்கள் தாராளாமாக உண்டு
சிறுவன் ரஸ்ஸலின் குறும்புகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கிழவனிடம் அவன் அடிக்கும் லூட்டிகள்,பேசும் நாய்களின் கொட்டம், பல்லாயிரக்கணக்கான வண்ண பலூன்கள் இவையெல்லாம்உங்களை எங்கோ எடுத்துச் செல்லும்......

கையில் கம்பன் கவியுண்டு.....

கலசம் நிறைய மதுவுண்டு,கையில் கம்பன் கவியுண்டு.....
சலிப்பூட்டும் வாழ்வில் நமக்குள் உணர்வுகள் செத்துப் போகாமல் புத்துணர்வு கொடுக்க,கம்பன் விழா போன்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு சென்று அதன் சுவைக்குள் மூழ்குவது அச்சனும்,அம்மையும் கொடுத்த வரம்....
கலை,பண்பாடு,இலக்கியம் இவற்றையெல்லாம் அறிமுகப்படுத்தியதும் அவர்களையே சாரும். வாசிப்பில் ருசி ஏற்படுத்தியவரும் அச்சனே.அவர்களது பாதங்களை என் மன,மொழி,மெய்களால் பணிந்து வணங்குகிறேன்.
ஜெயகாந்தன்,கண்ணதாசன்,விவேகானந்தர் (இவங்கெல்லாம் யாருன்னு கேட்கறீங்களா...சரிதான்) முதலியவர்களின் நூல்கள் அடங்கிய சிறுநூலகம் அச்சன்வைத்திருந்தார். குழந்தையாக இருக்கும்போதே இந்த ஆளுமைகள் அடியேனுக்கு அறிமுகம்.(இந்த பெருமை பீத்தலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)
கீரன்,கிருபானந்த வாரியார் உரைகளை எல்லாம் மூன்று வயது முதலே கேட்டு வருகிறேன்.(அப்பிடியும் ஏன் இப்பூடி இருக்கீங்கன்னு)
இக்காரணங்களால் கடந்த வாரம் புதுவைக் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்ற கம்பன் விழாவிற்கு சென்றிருந்தேன்.
கம்பவாருதி இலங்கை ஜெயராஜ் – உரையாற்றினார்.வாட் எ ஸ்பீச்.இப்படி ஒரு சொற்பொழிவாளரா!! என வியக்க வைத்தார்., கொஞ்சி விளையாடும் ஈழத்தமிழ் கலந்த அவரது உரை வீச்சு இன்னும் அடியேன் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.(ENT டாக்டரப் போய் பாக்கணும்) இராமாயணம் சொற்பொழிவு என்றாலும் அதை மட்டுமே பேசவில்லை, அதற்கு தொடர்புடைய தேவாரம்,திருவாசகம்,திருக்குறள், பெரிய புராணம், சைவ திருமுறைகள் ஆகியவற்றில் இருக்கும் செய்யுள்களையெல்லாம் தேவையான இடத்தில் எடுத்து நகைச்சுவையுடன் சொன்னார். இதுபோன்ற சொற்பொழிவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நாம் வாழும் காலமும், தமிழ்ச் சூழலும் இன்னும் முழுமையாக நோயுறவில்லை என்கிற மகிழ்ச்சி ஏற்படுகிறது

துப்பறியும் நாவல்கள் 1

1980ற்கு முன்னும் பின்னும் பிறந்தவர்களுக்கு துப்பறியும் நாவல்களைப்பற்றி சொல்லவேண்டியதில்லை.கொலை,கொள்ளை,கடத்தல், பரபரப்பு, திகில், விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள் நிறைந்து காணப்படுபவை துப்பறியும் நாவல்கள்.
அவை பால்ய வயதில் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.அதவும் தமிழ்வாணனின் கதைகள் வாசிப்பதற்கு கல்கண்டு.அவர் நடத்திய வார இதழும் அதுவே.
சுஜாதா,ராஜேஷ் குமார், ராஜேஞ்திர குமார், புஷ்பா தங்க துரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா போன்றோரின் துப்பறியும் கதைகளுக்கு ஒரு வகையில் தமிழ்வாணன் முன்னோடி. 
 தமிழ்வாணன் கல்கண்டு இதழில் துப்பறியும் நாவல்கள் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். அவர் உருவாக்கிய துப்பறியும் பாத்திரம் சங்கர்லால் என்பது அனைவரும் அறிந்ததே.சங்கர்லால் கதைகளால் கவரப்பட்டவர்களுள் அடியேனும் ஒருவன். எங்கள் ஊர் நூலகத்தில் நான் எடுத்துப் படித்தவை பெரும்பாலும் தமிழ்வாணன் மர்ம நாவல்கள்.
தேநீர் பிரியரான சங்கர்லால் எப்போதும் தேநீர் அருந்திக்கொண்டேதான் இருப்பார்.. சங்கர்லால் தன்னுடைய காலை மேசைமேல் குறுக்காக வைத்துக்கொண்டு தேநீர் அருந்தும் ஸ்டைல் சித்திரமாக மனதில் உள்ளது.
தமிழ்வாணன் சங்கர்லாலை நாயகனாக வைத்து மொத்தம் 23 நாவல்களை எழுதினார். இருண்ட இரவுகள்,ஹலோ சங்கர்லால், சங்கர்லால் வந்துவிட்டார், சங்கர்லால் துப்பறிகிறார், பாரிசில் சங்கர்லால், நியூயார்க்கில் சங்கர்லால்,இன்னொரு செருப்பு எங்கே?,மர்மத்தீவு,ஆந்தை விழிகள் போன்ற படைப்புகளை மறக்க முடியுமா...
அழகிய தமிழில் எழுதிய, தனித்தனி புத்தகங்களாக வெளிவந்த
சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்களை மணிமேகலைப் பிரசுரத்தினர் பெரிய நூலாக,ஆறு பாகங்களாக அட்டகாசமான வடிவமைப்பில். வெளியிட்டிருக்கிறார்கள்.நாஸ்டால்ஜியா உணர்வு வேண்டுமென்றால் படித்துப்பாருங்கள்...

WHO AM I

இந்த மஹாபுருஷனை,சிறு வயதில் இருந்தே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரின் மவுனத்தைக் கலைத்து விரட்டிக்கொண்டே இருந்தனர் என்று அவரின் சரிதம் கூறுகிறது.
அவ்வாறு விரட்டியவர்களை காலம் விரட்டிவிட்டது.ஆனால் விரட்டப்பட்டவர் காலத்தை வென்று அருணாசலமாக நமக்கு தரிசனம் தருகிறார்.
ரமணர் ஒரு ஸ்காலர் அல்ல.சிறிது காலமே பள்ளிக்குச் சென்றார்.தன் பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலைக்கு வந்து உண்மையைக்?/?!! கண்டறிந்தார்.அவரின் வழிமுறையே அல்லது தத்துவமே “நான் யார்”(WHO AM I)என்ற மிகச்சிறிய புத்தகம்.பன்னிரண்டு பக்கங்கள் அடங்கிய வெடிகுண்டு.விலை ஏழு.வாசித்துப்பாருங்கள்.
மிகப்பெரிய ஞானி எழுதிய மிகச்சிறிய புத்தகம்

ரியோ-வண்ணங்களின் கொண்டாட்டம்(2011)

வாழ்க்கை அர்த்தமற்று உள்ளது என்று உணரும்போது கார்லோஸ் சல்டன்ஹா இயக்கிய ரியோ படத்தைக் காண நேரும்போது உடனே உருவாகும் உற்சாகமும்,உல்லாசமும் லைப் ஈஸ் பியுடிபுல் என்று தோன்றுகிறது.
மரப்பொந்திலிருந்து விடியலை பராக்குபார்க்கும் புளு என்ற சிறகு முளைக்காத அறியவகை ஆண்கிளி, ரியோவிலிருந்து அமெரிக்காவிற்க்கு கடத்தப் படுகிறது. அமெரிக்கவில், மின்னொசோட்டாவில் லிண்டா என்னும் பெண்ணின் புத்தகக்கடையில் கூண்டிலிருக்கும் புளுவின் குறும்புகள் லிண்டாவுக்கு பிடித்துவிடுகிறது.புளுவும் லின்டாவிடம் ஒட்டிக்கொள்கிறது.
புளு அந்த அறிய பறவை இனத்தின் கடைசி ஆண் கிளி.
தன் பறவைக்காப்பகத்தில் உள்ள ஜூவல் எனும் பெண்கிளியுடன் புளுவை இணைசேர வைத்து, அதன் மூலம் அந்த அரிய இனம் அழிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு தனக்கு உதவும்படியும் டூலியோ என்ற பெயருடைய ரியோ நகரத்து பறவை ஆராச்சியாளர் லின்டாவிடம் வருகிறார்.இக்கிளியினத்தின் கடைசி பெண் கிளியான ஜூவெல்(Jewel) அவரிடம் இருக்கிறது.
முதலில் மறுக்கும் லின்டா பின் ஒத்துக்கொண்டு தானும் புளுவுடன் ரியோ நகரிற்குப் போகிறாள். அங்கு கூண்டிலிருந்து தப்பிக்கப் போரடும் ஜுவலை சந்திக்கும் புளு காதல் கொள்கிறதுlove at first sight. ஆனால் ஜூவலுக்கு தப்பிக்கவேண்டும் என்பதே சிந்தனை.

 அங்கிருந்து, கடத்தல்காரர்களால்களால், ஒரு வில்லன் பறவையின் உதவியுடன் அங்கிருக்கும் எல்லாப் பறவைகளும் கடத்தப் படுகின்றன. ஒருபுறம் பறக்கவே தெரியாத புளு, மற்றும் ஜுவலும் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்க,மறுபுறம் காணாமல் போன கிளிகளை தேடி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள் லின்டாவும், டுலியோவும்…..
இறுதியில் என்ன நடக்கிறது என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.படம் முழுவதும்
வண்ணங்கள்....வண்ணங்கள்....வண்ணங்கள்....
பிக்பாக்கெட் குரங்கு, புல்டாக் லூயி,பயமுறுத்தும் வெண்கிளி,காதல் தூது செல்லும் டூகான்பறவை - அவைகளின் expression...சூப்பர்.பாடல்களும்,சம்பா நடனமும் அருமை

வெண் புருவ வாலாட்டி

பறவைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பாடினால் நீங்கள் தவறாக நினைப்பீர்கள்.செம சிட்டு போகுதுடா என்று சொன்னால் எங்க,எங்க என்று ஆர்வமாக கேட்கப்படும்போது,வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியைக் காட்டினால் அடிக்க வருவீர்கள்.
ஆனால் பறவைகள் ரசிக்கத்தகுந்தவையே,(பூவையரைப் போலவே)
 இந்த பூமியில் உள்ள உயிருள்ளவை எல்லாம் நடக்கின்றது,ஓடுகின்றது,நீந்துகின்றது,தாவுகின்றது...ஆனால் பறப்பது பறவை மட்டும்.(ஆஹா,எப்பேற்பட்ட கண்டுபிடிப்பு)
அடியேனை ஈர்ப்பதும் அதுவே...
இப்படி bird watching பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்,அதெல்லாம் பிறகு.முதலில் கடலூர்ல ஜெயபால் சித்தப்பா வீட்டின் அருகில் ஷூட் செய்த வாலாட்டிக்குருவி
 வெண் புருவ வாலாட்டி (White Browed Wagtail) LC
இதற்கு கருப்பு வெள்ளை வாலாட்டி (Large Pied Wagtail) என்ற
பெயரும் உண்டு. வாலாட்டிகளிலேயே இவ்வகை தான் மிகப்பெரிய பறவை .
வெள்ளையான புருவத்தைக் கொண்டுள்ளது,கழுத்து முதல் மார்புப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி மட்டும் கருப்பு நிறத்திலும், மற்ற இடங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். அவ்வப்போது வாலை ஆட்டிக்கொண்டும் இருக்கும்

கோடைக்கேற்ற குளிர்பானங்கள்..

இந்தக் கடையை அடிக்கடி பாண்டிச்சேரியில் சுற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைவிட ரொம்ப காலமாய் பாலாஜியில் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்.சிறிய சாதாரண கடைதான்,ஆனால் சுவையோ அபாரம்.எப்போதும் பெருங்கூட்டம்.
ஏனென்றால் பாலாஜியில் படம் பார்க்க வரும் பெரும்பாலானவர்கள் இங்கே ஜூஸ் சாப்பிடாமல் போயிருக்க மாட்டார்கள். இந்த கடையில் வெயில் கொளுத்தும் கோடையில் ஜில்லென்ற ருசியான லஸ்ஸி அல்லது லெமன் சோடா அருந்தினால் ஆஹா ம்ம்ம்ம்..சூப்பர்ப்

இவர்களது ஸ்பெஷாலிட்டி நன்னாரி சர்பத்,பால் சர்பத்,சுவீட் லஸ்ஸி, லெமன் சோடா,லெமன் சர்பத்.மற்றும் பல குளிர்பானங்கள் உண்டு.
இவர்களுடய இன்னொரு ப்ளஸ் பாயிண்ட், சர்வீஸ்.எத்தனை பேர் வந்தாலும் கைகளால் தயாரித்து எடுத்து கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அது காலியாகிக் கொண்டேயிருக்கும்.லஸ்ஸி முப்பது ரூபாய்,நன்னாரி சர்பத்,லெமன் சோடா இருபது ரூபாய்.ஞாயிறும் கடை உண்டு.
முன்னெலாம் அழகிய நீண்ட தம்ளர்களில்,நீர் பூத்திருக்க கொடுப்பார்கள்,இப்போது யூஸ் அண்ட் துரோ கிளாஸ்,அது ஒன்றுதான் குறை. மற்றபடி காப்பி,டீக்கு பதிலாய் ஜூஸ், லஸ்ஸி என்று விரும்புகிறவர்களூக்கு லஸ்ஸி ஒரு டிவைன் ஃபினிஷிங் டச்.

ஓசை டு இசை

பால்ய வயதில் என்வாழ்வில் செவிவழி நுழைந்து இன்று என் எந்தநாளும் உன் இசை கேட்காமல் கடந்ததில்லை.
எப்போது உன் இரசிகனானேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதை எவ்வளவு யோசித்தாலும் சரியாக நினைவுக்கு வருவதில்லை.
நான்கு வயது இருக்கும்போதே நான் இரசித்ததெல்லாம் பின்னாளில் உங்கள் இசை என்று புரிந்து உள்ளம் பரவசம் அடைந்தேன்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,சிப்பி இருக்குது முத்தும் இருக்குது,உனக்கென்ன மேலே நின்றாய்,கம்பன் ஏமாந்தான்,ராகங்கள் பதினாறு போன்ற காலத்தால் அழியா பாடல்கள் சிறு வயதிலேயே என்மனதில் உறைந்துவிட்டன.
மெல்லிசை மன்னனே, உங்கள் தோளில் ஏறி நின்றுதான் ராஜாவையும்,ரகுமானையும் ரசிக்க முடிகிறது. அவர்கள் இசையை என் உள்ளம் ரசிக்கும் வேளையில், உங்கள் இசை என் உயிர் கலந்தது.

உங்கள் இசையில் உருவான பல பாடல்கள் என்றென்றும் அழியாத காவியங்கள் போல் மனதை மயக்கும் வகையில் அமைந்தன. மயக்கும் மாலைப்பொழுதே, செந்தமிழ் தேன்மொழியாள், தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், பாலிருக்கும் பழமிருக்கும், அத்தான் என்னத்தான், ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி, காலங்களில் அவள் வசந்தம், மாலைப்பொழுதின் மயக்கத்திலே, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், மலர்ந்தும் மலராத, நான் பேச நினைப்பதெல்லாம், எங்கிருந்தாலும் வாழ்க, கொடி அசைந்ததும் காற்று வந்ததா, ரோஜா மலரே, அன்று வந்ததும் அதே நிலா, அத்தை மடி மெத்தையடி, பேசுவது கிளியா, அமைதியான நதியினிலே, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, ஒளிமயமான எதிர்காலம், அதோ அந்த பறவை போல, பார்த்த ஞாபகம் இல்லையோ, தொட்டால் பூ மலரும், தமிழுக்கும் அமுதென்று, உன்னை நான் சந்தித்தேன், நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், பூ முடிப்பாள் இந்த பூங்குழலி, விண்ணோடும் முகிலோடும் என எத்தனையோ இசை ஓவியங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
மெல்லிசை மன்னரே, உங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்.

ஐந்து கரத்தனை

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!

 கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; - தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்....நாலடியார்

தன் கண்களால் காண்பதை மட்டுமே காண்பவர்கள் குழந்தைகள். அதைத்தாண்டி பார்க்கும் நிலையே வளர்ச்சி.அது கல்வியால் கைவரும்.அதுவே படைப்பாற்றல்,கற்பனை.ஆராயும்போது அதுவே உலகை ஆள்கிறது.
அதைத்தாண்டி பார்க்கும் யுக்தி கைவரப்படாதவர்கள் கல்வி கற்றும் ஒரு பெரிய குழந்தைகளே.

 புத்தகங்களை வாசிக்கிறேன் என்று சொன்னால் கல் தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய மூத்த குடியைப் பார்பதுபோல் என்னைப் பார்க்கிறார்கள் சிலர்.
புத்தகங்களை வாசிக்காமல் இருப்பது அவரவர் விருப்பம்.ஆனால் நான் புத்தகம் வாசிப்பதைப் பார்த்தாலே சிலர் கோபம் கொள்வதை,நான்ஏதோ தகாத காரியம் செய்வதைப் போல் உணருவதைப் புரிந்துகொள்ள முடிய வில்லை.காலில் படும் காகிதமும் கலைமகளே எனத் தொட்டுக்கும்பிடும் எனக்கு இதெல்லாம் புதிசா இருக்கு?
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் ;
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத்து இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் ;
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துள் பொருள் ஆவாள்.

தமிழ் வலைப்பூ

நண்பர்களுக்கு வணக்கம்,
                      உடனடி எதிர்வினைக்கும்,எண்ணப் பகிர்விற்கும் முகநூல் நன்று.ஆனால் அவை கடல் மேல் அலை.
                     எனவே சில எண்ணங்களின் சிந்தனைகளுக்கும்,அது தொடர்பான பயணத்திற்கும் இந்த வலைப்பூ.தொடங்கி பல வருடங்கள் ஆனாலும் இக்கணம் முதல் எண்ணங்கள் சொற்களாகின்றன.
                   வாசிப்பிற்கு நன்றிகள்......