வெள்ளி, 5 ஏப்ரல், 2019

கையில் கம்பன் கவியுண்டு.....

கலசம் நிறைய மதுவுண்டு,கையில் கம்பன் கவியுண்டு.....
சலிப்பூட்டும் வாழ்வில் நமக்குள் உணர்வுகள் செத்துப் போகாமல் புத்துணர்வு கொடுக்க,கம்பன் விழா போன்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு சென்று அதன் சுவைக்குள் மூழ்குவது அச்சனும்,அம்மையும் கொடுத்த வரம்....
கலை,பண்பாடு,இலக்கியம் இவற்றையெல்லாம் அறிமுகப்படுத்தியதும் அவர்களையே சாரும். வாசிப்பில் ருசி ஏற்படுத்தியவரும் அச்சனே.அவர்களது பாதங்களை என் மன,மொழி,மெய்களால் பணிந்து வணங்குகிறேன்.
ஜெயகாந்தன்,கண்ணதாசன்,விவேகானந்தர் (இவங்கெல்லாம் யாருன்னு கேட்கறீங்களா...சரிதான்) முதலியவர்களின் நூல்கள் அடங்கிய சிறுநூலகம் அச்சன்வைத்திருந்தார். குழந்தையாக இருக்கும்போதே இந்த ஆளுமைகள் அடியேனுக்கு அறிமுகம்.(இந்த பெருமை பீத்தலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)
கீரன்,கிருபானந்த வாரியார் உரைகளை எல்லாம் மூன்று வயது முதலே கேட்டு வருகிறேன்.(அப்பிடியும் ஏன் இப்பூடி இருக்கீங்கன்னு)
இக்காரணங்களால் கடந்த வாரம் புதுவைக் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்ற கம்பன் விழாவிற்கு சென்றிருந்தேன்.
கம்பவாருதி இலங்கை ஜெயராஜ் – உரையாற்றினார்.வாட் எ ஸ்பீச்.இப்படி ஒரு சொற்பொழிவாளரா!! என வியக்க வைத்தார்., கொஞ்சி விளையாடும் ஈழத்தமிழ் கலந்த அவரது உரை வீச்சு இன்னும் அடியேன் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.(ENT டாக்டரப் போய் பாக்கணும்) இராமாயணம் சொற்பொழிவு என்றாலும் அதை மட்டுமே பேசவில்லை, அதற்கு தொடர்புடைய தேவாரம்,திருவாசகம்,திருக்குறள், பெரிய புராணம், சைவ திருமுறைகள் ஆகியவற்றில் இருக்கும் செய்யுள்களையெல்லாம் தேவையான இடத்தில் எடுத்து நகைச்சுவையுடன் சொன்னார். இதுபோன்ற சொற்பொழிவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நாம் வாழும் காலமும், தமிழ்ச் சூழலும் இன்னும் முழுமையாக நோயுறவில்லை என்கிற மகிழ்ச்சி ஏற்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக