செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

மாயப்பெருநதி-ஹ.பி.

 

லிபரலிசத்தின் பாதிப்பால் மரபை நீக்கிய மூன்றாவது தலைமுறை நாற்பதுகளில் இருப்பவர்கள்.அது எந்த அளவுக்கு சென்றது எனில் திருமண்,திருகாப்பு அல்லது திலகம் அணிவதையே பொதுவெளிகளில் தவிர்ப்பது என்றானது.இத்தகைய நிலையில்தான் நம் மரபை நோக்கித் திரும்பும் நாவல்களை வாசிப்பது விருப்பமானது.ஹரன் பிரசன்னாவின் மாயப்பெருநதி அத்தகைய படைப்பு.முன்பதிவு செய்து சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது.அட்டைப்படம் பார்த்தவுடனே ஈர்த்தது.


முதல் பகுதியான ராகவன் கதை வாசிப்பின்பத்தை அளித்து,பகடியும் நகைச்சுவையும் இழையோடி பக்கங்கள் பறக்கின்றன.அதற்கு காரணம் ஆசிரியர் சார்ந்த துறை என்பதால் அவரின் நேரடி பதிப்பக அனுபவம் அதில் பதிவாகி உள்ளது என்பதே.மேலும் சி.சு.செல்லப்பாவை நினைவுறுத்தும் நாயகனின் போக்கு அதனை மெருகேற்றுகிறது.(புத்தகங்களை சுமந்து சென்று விற்பது)செல்லப்பாவுக்கு ஹபியின் ட்ரீபியூட் என்று தோன்றுகிறது.

 “விடிந்தால் உத்தியோகம். தேதி ஆனால் சம்பளம். வேளைக்குச் சாப்பாடு. விழுந்து புரள பெண்டாட்டி. அவ்வப்போது சந்தோஷம். அளந்து அளந்து பூரிப்பு. கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடலாம்”.

       இது பா.ராகவனின்     அலகிலா விளையாட்டு நாவலில் உள்ள வரிகள்.இப்படி இன்ட்ரோவர்ட்ஆன மிடில் கிளாஸ் மனிதன் தன் பிழைப்பை மட்டுமே வாழ்வியலாக கொள்கிறான்.அதில் தவிர்க்க இயலாத முறையில் அலுவலக சூழலில் சந்திக்கும் மனிதர்கள்,உறவினர்களிடம் மட்டுமே பழகி நட்பு கொள்கிறான்.இப்படிக் கழிகிறது அவன் வாழ்வு.மற்றபடி அவனுக்கு மரபு,தத்துவம் பற்றிய புரிந்துணர்வு கொள்ள நேரமில்லை,அவசியமும் வரவில்லை.

பதிப்பக அரசியல்,சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை ஊழியராக சந்திக்கும் சங்கடங்கள்.படைப்பாளிகளின் வாய்ஜாலங்கள் இவையெல்லாம் விரிவாக வருகிறது.

ஆனால் நடுவயதில் கனவில் வரும் தாமிரபரணி நதி மூலம்,ரீ இன்கார்நெஷன் அவனுள் தோற்றம் கொள்கிறது.அவனை  அகக்கொந்தளிப்புகள் கொண்டவனாக ஆகுகிறது.அந்த ஸ்வப்னத்தின் மூலம் அவன் தன் முற்பிறவி வாழ்க்கையை கண்டுகொள்கிறான்.அதிலிருந்து மாத்வ தரிசனத்தை நோக்கிப் போகிற பாதை திறக்கின்றது.

மரபை அறியாமல் நடுத்தர வாழ்க்கை வாழும் ஒருவனை கர்ம வாசனை எழுதத் தூண்டுகிறது.அதன் காரணம் முற்பிறப்பில் அவன் எழுதி நதியில் இட்ட கதை.அப்போது அவன் மாத்வ மரபின் சீடன்.

இந்திய தரிசனம் அனைத்திலும் சடங்குகள்,மறுபிறவி,கர்மா,குருபக்தி,முக்தி இவற்றை விளக்குபவை அல்லவா.குருவின் கருணை தேடல் கொண்ட மனிதனுக்கு மிக முக்கியம்.வைணவத்தில் கூட.

இந்த நாவலின் இரண்டாவது கதையின் முக்கியத்துவம் அது மாத்வ மரபை அறிமுகம் செய்கிறது என்பதே.மாத்வ குருவான மத்துவரின் மற்றொரு பெயர் ஆனந்ததீர்த்தர்.மாதவன் மற்றும் ஆனந்தன் என்ற இரு பெயர்களுமே மாத்வ குருவின் பெயரை எதிரொலிப்பதே அவர்களின் பாத்திரப்படைப்பை சொல்லிவிடுகிறது.

இதில் குருவும்,மாமனாருமானவரின் சாபம் கர்மாவாக ஆனந்தன் மேல் விழுந்து பிறவிகளாத்தொடர்கிறது.

த்வைதத்தின் முக்கியத்துவம்,அதன் சடங்குகள்,நூல்கள் இவற்றை ஹபி விரிவாகவே பதிவு செய்கிறார்.

இந்நாவலை இப்படி புரிந்து கொள்கிறேன். கனவில் எழும் கதையை எழுதுவதன் மூலம் தான் பிறந்த மாத்வ மரபை ராகவன் உணர முயல்கிறான்.அன்றாட வாழ்வின் பிழைப்பின் சலிப்பை அவனின் மென்மையான குணம் கொண்ட,அபூர்வமான வாழ்க்கைத்துணைவி மூலம் கடந்து வந்து மரபின் பாதையில் நடை போட ஆரம்பிக்கிறான்.அதற்குச் சாதகமாக அவன் நதியில் கிடாசிய  தசமுக அனுமனின் பிரசன்னம் துணையாக வருகிறது.கடந்த பிறவியில் அவன் பொறாமையால் வெறுத்த அவன் நண்பன் மற்றும் குருவாக மாறிய சுஜலேந்திரர் ஆசிதானே அது.

வெவ்வேறு காலகட்ட கதைகளை இரு வண்ண இழைகளாக எடுத்துப்  பின்னி,ஐம்பெரும்பூதங்களான நீர்,நிலம்,காற்று,தீ மற்றும் ஆகாயம் இவற்றின் பின்னணி கொண்டு அனுமன் என்னும் படிமம் வாயிலாக இணைத்திருக்கிறார்.

மாத்வத்தில் அனுமன்(வாயு அம்சம்) ஒரு முக்கிய படிமம்.வாயு அம்சமே மத்துவர்.எனவே எந்த விக்ரஹத்தால் குருவின் சாபம் விழுந்ததோ,அதுவே மறுபிறவியில் மனைவி வழியாக அவனைத் தேடி வருகிறது.அவன் சம்சார சாகரம் கடக்க குருவின் கருணை பரிபூரணமாக உள்ளது என்பதையே அது குறிப்பிடுகிறது.இதில் வரும் மாயப்பெருநதி அவனின் மரபான மாத்துவ தரிசனத்தையே குறிக்கிறது.

இந்நாவலை வாசிக்கும்போது பா.ராகவனின் அலகிலா விளையாட்டு மற்றும் தி.ஜாவின் அம்மா வந்தாள் நினைவுக்கு வருகிறது.அதிலும் இதே வேதப்பள்ளி,ஆன்மீக பின்னணி.ஆனால் ஹரன் இதில் தான் சார்ந்த மாத்வ சம்பிரதாயத்தை,மாத்வ தீஷை கொண்ட அனீஷ் கிருஷ்ணன் நாயர் தந்த தகவல்கள் உதவியுடன் எழுதி இருக்கிறார்.

பா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலைப் போல எளிய நடை மற்றும் பிராமண வாழ்வியலைப் பதிவு செய்கிறது.அதில் கங்கை எனில் இதில் தாமிரபரணி.பா.ரா.வின் எழுத்துக்களில் இருந்து ஹபியை வேறுபடுத்தி காட்டுவது அவரின் பாலியல் சித்தரிப்புகள்.

சமீபத்தில் இவ்வாறு காமத்தை அதன் உக்கிரத்துடனேயே சித்தரித்து இருப்பது,தேவிபாரதி என்று நினைக்கிறேன்.(நிழலின் தனிமை)

நான்கு சுவர்களுக்குள் யாருமறியாமல் மனமொத்த தம்பதியர் நிகழ்த்தும் காமத்துய்ப்பின்போது வெளிப்படுத்தும் உணர்வுகளும்,நிகழ்வுகளும் மிக அழகாக காட்சிப்படுத்தப்படிருக்கிறது.சில வாக்கியங்கள் தெறிப்புகளாக மேலே வந்து விழுந்து சுடுகிறது.

ஆனால் இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும்.லஷ்மி போல நேர்மறைத்தன்மை கொண்ட பெண் இருப்பாள் என நம்ப இயலவில்லை.சரி புனைவுதானே.போகட்டும்

ராகவனின் கதை கொண்டாட்டம் எனில் ஆனந்தனின் கதை பொறாமை கலந்த அவலம்.அதனால் இரண்டாவது கதையில் புலம்பல் தொனி அதிகமாகப் போய்விட்டது என்று நினைக்கிறேன்.மாத்வ சம்பிரதாயத்தை உள்வாங்க முடியாமல் ஆனந்தனின் தன்னிரக்கமும்,புலம்பலும் முன்னுக்கு வந்துவிட்டன.வாசிப்பு வேகத்தை சற்று குறைக்கிறது.

மாத்வதத்துவத்தின் சடங்குகள் டீடெய்லாக இருப்பதுபோல மாதவன், சுஜலேந்திரராகத் துலங்கி வருவது இன்னும் சில சம்பவங்களின் மூலம் அழுத்தமாக நிறுவிஇருக்கலாம்.மேலும் துவைத தத்துவம்(ஹரி சர்வோத்தமா,வாயு ஜீவோத்தமா) சிறிதளவே தொட்டு காட்டி உள்ளார் எனலாம்.

அதேபோல் மாத்வ பிராமணர்களான ராகவன்-லஷ்மி இல்லத்தில் கன்னடத்தில் உரையாடுகிறார்கள்.எனவே அவர்களின் கன்னட உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ.சாண்டில்யன் ராஜபேரிகை புதினத்தில் இந்த டெக்னிக் உபயோகப்படுத்தி உள்ளார்.(ஆங்கில உச்சரிப்பை,தமிழில் பதிவு செய்து,அடைப்புக்குள் தமிழ் மொழிபெயர்ப்பு கொடுத்திருப்பார்)

இதற்கு ஒரு காரணம் உண்டு.ஹபி தன் புதல்வி ஒரு நீதிக்கதை கூறும் காணொளியை முகநூலில் பதிவேற்றி இருந்தார்.அதில் இயல்பாக அக்குழந்தை கன்னடத்தில் பேசிக்கொண்டு இருப்பாள்.அதில் இயல்பான ஒரு பியுட்டி இருக்கிறது.சட்டென்று பிரக்ஞை கொண்டு அய்யயோ தமிழில் பேசாமல்,கன்னடத்தில் கதைத்து விட்டேனே என்று வெட்கப்பட்டு ஓடிவிடுவாள்.

இவையெல்லாம் குறையாக அல்ல ஒரு விடுபடலாக உள்ளதை சுட்டுவதாகக் கொள்ளலாம்.

மனிதர்கள் வாழ்வு எல்லைக்கு உட்பட்டது.ஆனால் மரபு காலந்தோறும் ஓடிகொண்டே இருக்கும் ஜீவநதி.தேடல் கொண்டவருக்காகவும் இக்கதையின் நாயகனுக்காகவும் அது காத்திருக்கிறது. இறுதி வரி தாமிரபரணி அவனுக்காக காத்திருக்கிறது என்பது அதைதான் குறிக்கிறது என நெகிழ்ச்சியாக முடிகிறது.முதல் நாவல் என்ற வகையில் ஹபிக்கு வாழ்த்துக்கள்.

 

செவ்வாய், 14 ஜூலை, 2020

ஏன் இப்படி?பகுதி 1

பகவான் ரமணரின் தத்துவ விசாரம் இப்படித் தொடங்குகிறது.நான் யார் இதுவா நேதி நேதி இப்படி ....
அதனை செய்ய அவரைப்போல் திடசித்தம் வேண்டும்.சரி...
நம்மைப் போன்ற வாழ்வியல் முறை கொண்டவர்கள் எவ்வாறு தத்துவ விசாரம் செய்ய இயலும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஏன்  தத்துவ விசாரம் செய்ய வேண்டும்?
இப்படியே மகிழ்ந்து குலாவி வாழ்ந்து முடிந்தால் என்ன என்பவர்கள் அகலலாம்.
வாழ்வின் அடிப்படை வினாக்களைப் பற்றிய தேடல் மனதில் எழுந்தால் மட்டுமே பதிலைத் தேடும் முயற்சிக்கு இப்பதிவு உதவக்கூடும்.
சரி வாழ்வின் அடிப்படை வினாக்கள் என்ன சார்...
முதலில் நம்முள்
       ஏன் பிறந்தோம்,என்ன செய்கிறோம்,இதுதான் வாழ்வா,ஏன் எனக்கு மட்டும் இவை நிகழ்கிறது,ஏன் மரணம் ஏற்படுகிறது,அதற்குப் பிறகு....
இரண்டாவது வெளியில்
       இந்த பூமி எப்படித் தோன்றியது,நம்மில் சூரியன்,சந்திரன் பங்கு என்ன,பிரபஞ்சம் என்றால் என்ன இதுபோன்ற சந்தேகங்கள்
    இந்த சஞ்சலங்களுக்கு இளமையில் பல மதங்கள் பல வழிகள் காட்டும்.குழப்பமாக   இருக்கும்.பல மாஸ்டர்களின் நூல்கள் அறிமுகமாகும்.நம் குடும்பத்தில் உள்ள மரபுகள் பழையனவாகவும்,மற்ற மதங்கள் புதியனவாகவும் காட்சி தரும்.அவ்வாறு இன்னாட்டிலாவது சூழல்களை அமைத்திருக்கிறார்கள் மிஷனரிகள்.அவர்கள் நரிகள்தான் இல்லையா.
   இங்கேதான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சற்று பிசகினால் நீங்கள் திசை மாறி விடுவீர்கள்.ஆமாம்.
  அப்படி மாறாமல் முப்பத்தி ஐந்து வரை வந்து விட்டீர்கள் எனில் மீண்டுவிடலாம்.இனிதான் நம் மரபின் மேன்மை உணர எவ்வாறு அது கட்டப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
வெளியில் உள்ள கவன ஈர்ப்புகள் குறைந்திருக்கும்.ஓரளவு பெண்ணின்பம் கண்டுணர்ந்து அப்புறம் என்ன என்று நிற்கும்போதுதான் இப்பதிவு ஓரளவு உதவக்கூடும்.
   அதற்கு முன் உடல்,மனம்,அறிவு,உள்ளம் மற்றும் இவை எப்படித் தனியாகவும்,இணைந்தும் செயல்படுகிறது என்பதின் அர்த்தத்தை நாமாகவே சிந்தித்து தெளிந்து கொள்ள வேண்டும்.எளிதுதானே.
   இத்தகைய உள்ளத்திற்கும் வெளியில் உள்ள சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளையும் அறிய வேண்டும்.
சமூக நிகழ்வுகள் நம் உள்ளத்தையும்,உள்ளம் சமூகத்தில் நம் நடத்தையையும் எவ்வாறு மாற்றுகின்றது என்பதையும் கவனித்து வரவேண்டும்.
     எனவே சமூகம் நம் உள்ளத்தை பாதிக்க விடக்கூடாது.நம் உள்ளம் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளில் பங்கெடுத்து,பின்னர் தன் இயல்பு நிலைக்கு மீள வேண்டும்.
  சரி இந்த இயல்பு நிலை என்பது என்ன.தனக்கு  உரிமையுள்ள மங்கையை,அச்சமின்றியும்,பரஸ்பர விருப்பத்துடனும் கண்டு,விண்டு,உண்டு  முக்கோணத்தின் உச்சி,பின்னர் இறக்கம் கொண்டு கிடக்கும்போது இனிய அயர்ச்சி ஏற்படுகிறது  அல்லவா.அந்த மனநிலை இருக்கில்லையா...அதான் இயல்பு நிலை.
  முக்கியமாக சமூகத்தில் நாம் ஆல்ஃபா,பீட்டா,காமா எப்படி இருந்தாலும் அது பொருட்டில்லை.சரி.இப்போ இயல்புநிலை கொஞ்ச காலம் பழக வேண்டும்.
    அடுத்து என்னவென்றால் நம் குடும்பம்,மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறந்தார்களின் தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள செயல்களை செய்யவேண்டும்.இது அடிப்படையானது.
  பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் அதற்கேற்றவாறு வசிக்க வேண்டும்.
நாம் முற்றுன்மையை அடைய நம் மரபிலேயே வழி உள்ளது.



 ,


 





புதன், 31 ஜூலை, 2019

சரஸ்வதி கடாட்சம்

 ஜெ வின்  அறம் கதையில் செட்டியார் ஆச்சியின் கூற்றாக ஒரு அற்புதமான வாக்கியம் இருக்கிறது.இலக்கிய வாசகனாக, மனம் சலிக்கும் போது புதிய குதூகல ஊற்றை பொங்கச் செய்யும் மகா மந்திரம் அது.
"லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணுபாப்பான்னு சொல்லுவாங்க…"
        அப்படி ஏழேழு ஜென்மம் கண்டு , இந்தப் பிறவியில் அவளை ஆராதிக்கும் உள்ளம் வாய்த்மைக்காக மாதங்கியை வணங்கி மகிழ்கிறேன்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை
அறியா சனத்தி லரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய்
                                                      -கவி காளமேகம்
மேலும் பல வழிகளில் அவளை  உபாசிக்க எண்ணிய வேளையில்,நண்பர்கள் இந்த புதிய வழியைக் கண்டுள்ளார்கள்.அவர்களுக்கு நன்றி.
https://prabhumayiladuthurai.blogspot.com/2019/08/blog-post.html
      

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வருத்தப்படாத கரடி சங்கம்

வீட்ல, கையில டிவி ரிமோட் சிக்கினால் ரிமோட் அழற அளவுக்கு எல்லா சேனலையும் மாத்தி கதற அடிப்பேன்.
ஆனா அம்மா இந்த விஷயத்தில் ரொம்ப நல்லவங்க. ஒருமணி நேர சீரியலா இருந்தாலும் விளம்பர இடைவேளையில் கூட வேற சேனல் மாத்த மாட்டாங்க.எப்பவும் சன்தான்.
இப்ப என்னோட பையணும் அப்படித்தான்.சுட்டி டிவி வச்சிட்டா நாலு மணி நேரத்துக்கு ரிமோட் தேவைப்படாது.அதனால அடியேனும் சுட்டி டிவிக்கு ரசிகன் ஆயிட்டேன். அதுல பசுமை வாய்ந்த மரங்களும்,காட்டுயிர்கள் உலவும் வனம் சார்ந்த ஒரு தொடர் வாரம் ஐந்து நாள் வருகிறது
 அதன் பெயர் வருத்தப்படாத கரடி சங்கம்’.சீனத்தயாரிப்பான அக்கதையில் வைகைப்புயல் வடிவேலின் குரலில் பேசும் ஒரு வேட்டைக்காரன் காட்டில் உள்ள மரங்களை வெட்டி வியாபாரம் செய்து வருகிறான்.அதனால் தாங்கள் மகிழ்ச்சியாக வாழும் காடு மெல்ல அழிந்துவிடும் என்று அங்கு வசிக்கும் சகோதரர்களான கரடிகள் இரண்டும்,அணில் ஒன்றும் அச்சப்படுகின்றன. இதனால் வேட்டைக்காரனை மரம் வெட்டவிடாமல் தடுத்து நிறுத்த தொடர்ச்சியாக அவை முயற்சி செய்கின்றன.. குழந்தைகளுக்கானது என்பதால் வேடிக்கையும் நகைச்சுவையும் இக்கதையில் போட்டி இடுகின்றன.கதையின் மையம் காடு அழிவுறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் அருமையாக உள்ளது.
ஒளிபரப்பாகும் நேரம்
MON - FRI:10:00AM;5;00PM 10:30PM...

வைத்தியசாலை அனுபவங்கள்....

சென்ற சில மாதங்களாகவே இடதுகை,தோளில் குடைச்சல் இருந்தது.இடது கை வலி என்றாலே மாரடைப்பின் அறிகுறி என்று ஒரு சம்சயம்.உலகத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் ஏதும் இல்லை என்றாலும் இவ்வயதிலேயே இறைவன் திருவடி நிழலை அடைய அவசரம் ஒன்றுமில்லை அல்லவா...
ஸோ,அரியூரில் எழுந்துள்ள விஜயகாந்த் ஆஸ்பத்திரி என்று அன்போடு அழைக்கப்படும் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துகொள்ள ஆங்குள மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டேன்.
 சிகிச்சை தரும் பெண் பிசியோதெரபி இறுதிவருட மாணவி.பெயரென்ன,எந்த ஊர் என்று இயல்பாகப்பேசியபடியே கையைத்தூக்கி,மடக்கி எங்கெங்கு வலி என்று அனலைஸ் செய்தார்.பின்னர்
பச்சைத்திரை முழுதும் வாயிலை மறைக்கும்
ஒரு சிறிய அறைக்கு அழைத்துச்சென்று அமரவைத்தார்.உள்ளே சில அப்பாரட்டஸ்.(காண்க படம்)மேலுடையை நீக்கி அந்த கருவியில் உள்ள நான்கு வயர்களை இடது கையின் வலி உள்ள புள்ளிகளில் இணைத்து இயந்திரத்தை முடுக்கிவிட்டார்.சட்டென்று கைக்குள் ஒரு பிரளயம்,அதிர்வுகள்,நரம்பு முறுக்கல்கள்...பிசைதல்கள்....அந்த அதிர்வுகளை கூட்டவும்,குறைக்கவும் முடியும்.இந்த ட்ரீட்மென்ட் பெயர் அல்ட்ராசவுண்ட் டெக்நிக் என்று அப்பெண் சொன்னார்.ஒலி அலைகள் தசைகளில் புகுந்து செய்யும் மாயம்.
இதுவரை உணர்ந்திராத அனுபவம்,பன்னிரண்டு நிமிடம் நீடித்த ட்ரீட்மென்ட்.
இப்போது வலி குறைந்துள்ளது போல் பட்டது.ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும்,வீட்டில் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கவேண்டும் என்று அறிவுறித்த நன்றி சொல்லி விடைபெற்றேன்.அதைத்தான் செய்து வருகிறேன்.
மருத்துவ அதிசயங்களில் ஒன்றாக எனக்கு அது தெரிந்தது. மனித அறிவின் வளர்ச்சியை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்புதானே அது. இப்படிப்பட்ட அனுபவங்களின் திரட்சிதானே வாழ்க்கை.

பகவான்

15 ஆண்டுகளுக்கு முன் பகவான் ரஜ்னீஷின் நூல்களை ரோமன்த் ரோலந்த் நூலகத்தில் நாள் முழுதும் அமர்ந்துகொண்டு வாசித்து அகமாறுதல் கொண்டு இரவு எட்டுமணிக்கு வெளிவரும்போது அடைந்த உணர்வெழுச்சி....
 ஜெ.மோ. சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.....
"இருபத்தைந்து வருடம் முன்பு நான் ஒருநாள் ஒரு நூலகத்தில் இருந்து வெளியே வந்து தெருவில் செல்லும் பெரும் கூட்டத்தைப் பார்த்து சட்டென்று மன அதிர்ச்சி அடைந்தேன். அவரில் எவருக்குமே மானுடம் இத்தனை காலம் சேர்த்து வைத்துள்ள ஞானத்தின் துளிகூட தெரியாது. அவர்கள் எவரும் எதையும் சிந்திப்பவர்கள் அல்ல. இளமையில் அவர்களுக்கு பிறப்பில் தற்செயலாக எது கிடைக்கிறதோ எதை சூழல் அவர்கள் மேல் ஏற்றுகிறதோ அவைதான் அவர்கள். அவர்கள் அடைவதென்று ஏதுமில்லை. பிரம்மாண்டமான ஒரு பரிதாபம் என் தொண்டையை அடைத்தது. உண்மையில் அன்று நான் கண்ணீர் மல்கினேன்."-ஜெ.மோ.

சனி, 6 ஏப்ரல், 2019

வன்மேற்கின் தேவதை


 ராதாகிருஷ்ண வடிவம் காதலின் சிம்பல்.ஒரு விஷயம் தெரியுமா...கிருஷ்ணன் ராதாவை விட பத்துவருடம் இளையவன்.காவியக்காதல் என்பது வயதில் அதிகமான பெண்ணோடு வருவது என்பது அனுபவ உண்மை.
1995ஆம் வருடம் குமுதத்தில் அன்டோனியோ பெண்டேராஸ் சண்டைக்காட்சிகளில் மட்டுமின்றி காதல் காட்சிகளில்கூட அதகளம் செய்திருக்கிறார் என்று வாசித்தேன்.அந்த
ப்படத்தைக்காண ஆவல் எழுந்தது.
 நான் என்றைக்காவது லம்போர்கினி வாங்கினால் அந்தப்படத்தின் பெயரை வைப்பேன்.டெஸ்பெரோடோ.ஆம் டெஸ்பெரோடோ என்றால் அஞ்சாதவன் என்று பொருள்.கிட்டார் என்ற இசைக்கருவியை இளைஞர் மத்தியில் ஒரு வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக உலவவிட்டது சிறப்பு.என்ன ஒரு ஸ்டைலிஷ் மேக்கிங்.அருமையான ஆக்க்ஷன் மூவி.விஷயம் அதுவல்ல.என்னைவிட பன்னிரண்டு வயது மூத்த அழகுப்புயல் தாக்கியதும் அப்பொதுதான்.வாழ்வின் இனிய தருணமது.
 டெஸ்பெரேடோவில் வரும் நாயகி சல்மா திரைப்படங்களில் மட்டுமே காணப்படும் குறும்புப்பெண்தான்.கவர்ச்சி,விரைந்து காதலில் வீழ்தல்(ஈசியா மடிஞ்சிரும்)வீட்டின் கூரைகளில் தாவிப்போய்,நாயகனுக்கு இணையாய் துப்பாக்கிகளால் சுடுவது இப்படி...ஆனால் கரோலினா என்ற பெயரில் வரும் நாயகி முதலில் புத்தகக்கடை வைத்து நடத்துபவர் என்றே அறிமுகம் ஆகிறார்.அப்போதே மனதில் இடம் பிடிக்கிறார்.(நாயகன் மனதில் மட்டுமல்ல)
ஹாட் ச்சிக் என்ற சொல் சிறப்பாக பொருந்துவது டெஸ்பரேடோ நாயகிக்கே.அதாவது 1995இல் மட்டுமல்ல.இந்த வருடம் வெளிவந்த தி ஹிட்மென்ஸ் பாடிகார்ட் படத்தில் அவரைக்காணும்போதும்(இப்போது வயது 53) இப்போது கூட அப்பிடித்தான் தோன்றுகிறது.
சரி,சரி பெயரைச்சொல்லி விடுகிறேன்.சல்மா ஹயக்.மெக்ஸிகோவில் பிறந்தவர்.பழுப்பு நிற காந்தவிழிகள் உடையவர்.36-24-36.கூந்தல் கருப்பு.ஒரே திருமணம்தான்.ஒரு பெண் குழந்தை உள்ளது.கிறித்தவராக இருந்தாலும் யோகா செய்வதில் அதிக விருப்பம். தி ஹிட்மென்ஸ் பாடிகார்ட் படத்தில் அவரின் என்ட்ரி யோகாசனம் போஸில்,அதுவும் ஜெயிலில் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.புகைப்படம்

கண்டு இதயத்தாக்குதல் அடையுங்கள்.
 இயல்,இசை,நாடகம் தமிழர்களின் புதையல்கள்.நாடகத்தின் உச்சம் திரைப்படம்.இதனால் நாட்டைப்பிடித்தவர்கள் உண்டு.நாசமாய்ப் போனவர்களும் உண்டு.அதே நாடகத்தின் உறைந்த வடிவம் சித்திரம்.அந்த சித்திரம் ஓவியங்களாக மிளிரும்.மட்டுமல்ல சித்திரக்கதைகள் என்னும் கலையாகவும் பரிணாமம் அடைந்துள்ளது தற்போது.அவை காமிக்ஸ் என அழைக்கப்படுகிறது.
கவ்பாய் கதைகள் காமிக்ஸ்சின் ஈர்ப்பு கொண்ட வடிவம்.அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களும்,புகை கக்கும் ரயில் வண்டிகளும், ,புழுதி பறக்கும்படி விரையும் புரவிகளும்,பாலைவனமும்,தங்க வேட்டையும்,தொப்பி போட்ட ரேஞ்சர்களும்,சலூனும்,வின்செஸ்டர்&ரிவால்வர் சண்டைகளும் என அது ஒரு தனி உலகம்.
அதில் ஒரு காவியம் மைக்கேல்சார்லியரால் உருவாக்கப்பட்டு,சித்திர வித்தகர் மோபியஸ் ஜிரவ்வால் உயிர் கொடுக்கப்பட்ட மின்னும் மரணம்(கான்ஃபெடேரேட் கோல்ட் சீரிஸ்) என்னும் பதினொரு பாகக் கதை.அமெரிக்காவின் தென்பகுதியில் 1861-1865ஆம் வருட வாக்கில் நடைபெறுவதாக புனையப்பட்டிருக்கும்.உண்மையில் அந்தக்காலகட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுப்போர் நடைபெற்று விளைவாக பல லட்சம் பேர் உயிர்இழந்தார்கள்.கறுப்பர் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அற்புதமான இக்கதையை தமிழிலும் வாசிக்கலாம்.விலை ஆயிரம் ரூபாய்தான்.

 அதில் சிகுவாகுவா சில்க் என்ற காலத்தால் அழியாத வனப்பும்,சாகசமும்,சாதுர்யமும் கொண்ட நங்கையின் பாத்திரத்துக்கு சல்மாதான் பொருத்தம்.அவரைத் தவிர வேறு எவரையும் கற்பனை செய்ய முடியவில்லை.இருவரும் மெக்ஸிகோ என்னும் சிப்பியில் பளிச்சிடும் முத்துக்களே..மட்டுமல்ல சல்மாவின் அங்கலாவண்யங்கள் கூட முழுமையாகப்பொருந்துகின்றன.