ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வைத்தியசாலை அனுபவங்கள்....

சென்ற சில மாதங்களாகவே இடதுகை,தோளில் குடைச்சல் இருந்தது.இடது கை வலி என்றாலே மாரடைப்பின் அறிகுறி என்று ஒரு சம்சயம்.உலகத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் ஏதும் இல்லை என்றாலும் இவ்வயதிலேயே இறைவன் திருவடி நிழலை அடைய அவசரம் ஒன்றுமில்லை அல்லவா...
ஸோ,அரியூரில் எழுந்துள்ள விஜயகாந்த் ஆஸ்பத்திரி என்று அன்போடு அழைக்கப்படும் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துகொள்ள ஆங்குள மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டேன்.
 சிகிச்சை தரும் பெண் பிசியோதெரபி இறுதிவருட மாணவி.பெயரென்ன,எந்த ஊர் என்று இயல்பாகப்பேசியபடியே கையைத்தூக்கி,மடக்கி எங்கெங்கு வலி என்று அனலைஸ் செய்தார்.பின்னர்
பச்சைத்திரை முழுதும் வாயிலை மறைக்கும்
ஒரு சிறிய அறைக்கு அழைத்துச்சென்று அமரவைத்தார்.உள்ளே சில அப்பாரட்டஸ்.(காண்க படம்)மேலுடையை நீக்கி அந்த கருவியில் உள்ள நான்கு வயர்களை இடது கையின் வலி உள்ள புள்ளிகளில் இணைத்து இயந்திரத்தை முடுக்கிவிட்டார்.சட்டென்று கைக்குள் ஒரு பிரளயம்,அதிர்வுகள்,நரம்பு முறுக்கல்கள்...பிசைதல்கள்....அந்த அதிர்வுகளை கூட்டவும்,குறைக்கவும் முடியும்.இந்த ட்ரீட்மென்ட் பெயர் அல்ட்ராசவுண்ட் டெக்நிக் என்று அப்பெண் சொன்னார்.ஒலி அலைகள் தசைகளில் புகுந்து செய்யும் மாயம்.
இதுவரை உணர்ந்திராத அனுபவம்,பன்னிரண்டு நிமிடம் நீடித்த ட்ரீட்மென்ட்.
இப்போது வலி குறைந்துள்ளது போல் பட்டது.ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும்,வீட்டில் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கவேண்டும் என்று அறிவுறித்த நன்றி சொல்லி விடைபெற்றேன்.அதைத்தான் செய்து வருகிறேன்.
மருத்துவ அதிசயங்களில் ஒன்றாக எனக்கு அது தெரிந்தது. மனித அறிவின் வளர்ச்சியை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்புதானே அது. இப்படிப்பட்ட அனுபவங்களின் திரட்சிதானே வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக